23 November, 2007

தப்பித்தலின் சாத்தியங்கள்...

நான் விதைக்கப்பட்டிருக்கும்
சின்னஞ்சிறு பரப்பினை
வன்மமாய்
நினைவூட்டுகின்றன
இந்த தொட்டிச்செடிகள்..


விடுபடலோ
விட்டு விடுதலையாதலோ
சாத்தியமாவதில்லை
எப்போதும்...

வேர்களால் உள்வாங்கி
பூக்களாய் எதிரொளித்து
தளிர்நுனிகள் அனைத்திலும்
உயிர்சொட்டும் விருட்சங்கள்
காழ்ப்புணர்ச்சியோடு
கசப்புத் தருகின்றன...

தப்பித்தல்களுக்கான
இடம் தேடிக்களைத்து
எங்கேனும் எதிலேனும்
ஒளிந்துகொள்ள முயன்று
முடிவாய் மறைந்து போகிறேன்
கவிதைகளின் பின்னால்.

credits
gayathri
http://gayatri8782.blogspot.com

உதிர்தலும் துளிர்த்தலும்...

வாரத்தின் ஏழு நாட்களும்
ஒன்றேபோலிருக்கின்றன...

நிறத்தில்..
வடிவில்..
அளவில்..
எதிலும் மாற்றமில்லை.

பகலில் தொடங்கி இரவில் முடியும்
இந்த நாட்களில்
எங்கு தொடங்கி எங்கு முடிகிறது
உன் நினைவென்பதை
அனுமானிக்க முடிவதில்லை..

தினமும் காகிதங்களின் வடிவில்
உதிர்ந்தபடியே இருக்கின்றன
நாட்களும் சில நம்பிக்கைகளும்..
என்றாலும்..


யாரேனும் எழுதிய கடிதமோ
கைவிட்டுப் போன உறவோ
தொலைந்து போன பொருளோ
நிச்சயம் கிடைக்கலாம்
இன்றைக்காவது...

credits:
gayathri. http://gayatri8782.blogspot.com/

21 November, 2007

தனிமை, வெறுமை
வெற்றிடம், மெளனமென
நாள்பட்ட சொற்களின் துணையோடு
எத்தனை கவிதைகள் எழுதியபோதும்
எந்தக் கவிதையும் நிரப்பிவிடவில்லை
எப்போதுமிருக்கும் தனிமையை...


credits:
Gayathri - palai thinnai
http://gayatri8782.blogspot.com/