Skip to main content
மழை சாட்சியாய்.....


நேற்று மாலை பேருந்தின் ஜன்னலோரப் பயணத்தின்போது வழக்கம் போல உன் நினைவு வந்தது. தொலைதூரப் பயணங்கள் எப்போதுமே சுகமானவைதான் இல்லையா? அவசர அவசியங்கள், செய்துமுடிக்க வேண்டிய பொறுப்புகள் ஏதுமின்றி சாலையோர மரங்களையும் கடந்துபோகும் மனிதர்களையும் வெறுமனே வேடிக்கை பார்த்தபடியிருக்கலாம். சேருமிடம் வரும் வரையில் நாம் செய்யக்கூடியதென எதுவும் இருக்காது, விரும்பியதை சிந்தித்திருத்தலைத் தவிர.

அதிலும் பக்கத்து இருக்கைப் பெண்களின் முழங்கை உரசல்கள், அநாவசிய விசாரிப்புகள், எரிச்சலூட்டும் நெருக்கங்கள் ஏதுமின்றி தன்னந்தனியே ஒற்றை இருக்கையில் சாய்ந்து கொண்டு, கம்பீரமாய் நகர்வலம் போவதாய் கற்பித்துக் கொள்வதும், கூடுதலாய் உன் நினைவுகளைத் துணைக்கழைத்துக் கொள்வதும் வெகு செளகரியமானதும் கூட. நேற்றைய மாலைப்பொழுது இதுவரை சந்தித்திருந்த சாயந்திர வேளைகளை விடவும் மிக அழகாயிருந்தது. ஒவ்வொரு மாலையும் ஏற்படுத்தும் அதே பிரமிப்பு.. அதே கிளர்ச்சி.. அதே ஆனந்தம். ஆனால் ஒவ்வொரு நாளும் தனித்துவமாய்...

மேகங்கள் வெகு சோகமாய் ஒன்றுகூடி கருமையாய் திரண்டிருந்தன, அழப்போவதன் அறிகுறியாய் உதடு பிதுக்கும் குழந்தை போல. உப்பிய மேகங்களின் உள்ளே தளும்பிக் கொண்டிருந்தது வானத்தின் கண்ணீர்! லேசாய் புன்னகைத்துக் கொண்டேன். நானும் கூட இப்படித்தான்.. உன்னுடன் ஊடல் கொண்டாடும் பொழுதுகளில், சண்டைகள் தீர்ந்து சமாதானம் பேச விழைகையில், சிறிய பிரிவுகளுக்குப் பின்னான விரும்பத்தக்க சந்திப்புகளில் இதோ.. இந்த மேகங்களைப் போலத்தான்... உணர்வுகள் பொங்க... கண்கள் ததும்ப.. மெளனமாய் உதடுகடித்தபடி நின்றிருப்பேன்.... எந்த நேரமும் அனைத்தையும் கொட்டித் தீர்த்துவிடக் கூடிய அபாயங்களோடு! உன்னைச் சந்தித்த பின்னாய்... எத்தனை கணங்கள் அந்த தவிப்பை என்னால் காத்துநிற்க முடிந்ததென்பதை ஒருமுறை கூட அனுமானிக்க முடிந்ததில்லை.

சிறிது நேரத்தில் என்னைப் போலவே கட்டவிழ்ந்து கொட்டத் தொடங்கிவிட்டன மேகங்களும். மண்ணைத் தொட்டுத் தழுவும் வேட்கையோடு, இரண்டறக் கலந்துவிடும் ஆவேசத்தோடு, தீராக் காதலோடு, எதையோ முடிவிற்குக் கொண்டுவரும் தீர்மானத்தோடு சீராய்ப் பெய்து கொண்டிருந்தது மழை. மண்வாசனையும் மழைஸ்பரிசமும் உண்டாக்கிய கிளர்வில் அவசரமாய் கவிதையொன்று எழுதுவதற்கான பரபரப்பு எழுந்தது என்னுள். ஆனால்..மடை திறந்த வெள்ளத்தில் அலைபாயும் மீன்களென பிடிகொடுக்காமல் நழுவியபடியிருந்தன சொற்கள். மேகமாய் மிதக்கும் மனது, சாலையில் தேங்கிய மழைநீரில் சிந்தி வண்ணங்களாய்க் குழம்பும் எண்ணெய் போல, கலைவதும் சேர்வதுமாய் கண்களில் மின்னி மறையும் உன் பிம்பம்.. காற்றைக் கிழித்தபடி பேரிரைச்சலாய் விரையும் பேருந்து... இந்த நிமிடங்களே எப்போதும் சாஸ்வதமாயிருந்தால் எத்தனை சுகமாயிருக்கும் என்று அபத்தமாய் ஒருமுறை நினைத்துக் கொண்டேன்.

திடுமென, எப்போதும் என்னைப் பற்றித் தொடர்ந்தபடியும் என்னை நிரப்பியபடியும் இருக்கும் உன் சொற்கள் பற்றிய நினைவெழுந்தது.
உண்மை தான்.. எப்போதும் என்னைச் சுற்றி திரும்பிய பக்கமெல்லாம் உன் சொற்களே சூழ்ந்திருக்கின்றன. சொற்கள்.. ஏராள அர்த்தங்களை, துல்லியமான உணர்வுகளை, சில அதிர்ச்சிகளைச் சுமந்தபடி அலையும், சிந்திக்கும் போதெல்லாம் என்னை இல்லாமலாக்கும், அபாயமும் ஆதிக்கமும் மிகுந்த உன் சொற்கள்! சில நேரங்களில் எனக்கென்றே கூரிய வார்த்தைகளைப் பிரயோகிப்பாய் நீ. பழம் நறுக்குகையில் கை தவறுவது போல சரேலென மனதைக் கீறிப் போகும் வார்த்தைகள். என்றபோதும் அதையும் நான் விரும்புவதாகவே உணர்கிறேன். உன் பிம்பமே சொற்களால் ஆனது தானோ என உறக்கம் தொலைந்த பின்னிரவுகளில் நான் பலமுறை எண்ணிக் கொள்வதுண்டு. எப்படி இப்ப்ப்படி பேசுகிறாய் நீ? எவ்வளவு பேசுகிறாய்.. சந்தித்த நாள் முதலாய் என்னவெல்லாம் பேசியிருப்பாய் என்னிடம்? அல்லது எதைத்தான் பேசிக் கொள்ளவில்லை நாம்? நீ பேசிப் போனவற்றை மீண்டும் எடுத்துப் பார்க்கும்போதெல்லாம் பிரியத்தால் மனம் கசிய பிரமிப்பும் கர்வமுமே எஞ்சுகிறது என்னுள்.


மழை வேகமெடுத்தது. ஜன்னல் வழியாய் சாரல் வடிவில் நுழைந்து வேகமாய் நனைத்தது என்னை. யோசித்துத் தடுக்க முனைவதற்குள் முழுவதுமாய் நனைந்திருந்தேன். கோபம் வந்தது.. "அறிவுகெட்ட மழையே.. நான் என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது, எங்கெல்லாம் போக வேண்டியிருக்கிறது.. எதுவும் தெரிந்து கொள்ளாமல், இப்படித்தான் காலநேரமின்றி நனைத்துத் தொலைப்பாயா முட்டாளே?" திட்டலாம் தான்! கடிந்துகொண்டால் மழை என்ன கண்டுகொள்ளவா போகிறது?

நீயும் இப்படியே தான்! என் லட்சியங்கள், தீர்மானங்கள், விருப்பங்கள், முடிவுகள்... எதுவும் என்றுமே உனக்கு ஒரு பொருட்டாய் இருந்ததில்லை. மழைதான் நீயும்! எதிர்கொண்டணைப்பதில், எதிர்பாராமல் நனைப்பதில், எதிர்பார்க்கும் போது ஏமாற்றம் தருவதில் மழையே தான் நீ! நிறைய்ய சந்தோஷங்களையும் அநேக தொல்லைகளையும் ஒரே நேரத்தில் ஒன்றாய்த் தர உங்களிருவரால் மட்டும்தான் முடிகிறது!!

நம் முதல் சந்திப்பு நினைவிருக்கிறதா உனக்கு? எப்படி மறந்துவிட முடியும்? அன்றைய தினமே.. அது மறந்துவிட முடியாத, மறந்துவிடக் கூடாத தினமென்று உறுதிப்படுத்திக் கொண்டோம் இல்லையா? முதன் முதலாய் உனக்கென்று கவிதை எழுதி உன்னிடம் காண்பித்த போது.. சொல்லும் முன்பாகவே அதிலிருந்த உன் அடையாளங்களைக் கண்டு கொண்டாய்! "கவிதையின் பின்புலம் யார்? நானா?" என்றபடி நெகிழ்ச்சியாய் என் விரல்களைப் பற்றிக் கொண்டாய். அந்த தொடுதல் அதிகாலை நேரப் பூக்களைப் போல மென்மையாய் தண்ணென்றிருந்ததாய் நினைவு எனக்கு.

உனக்கும் எனக்குமிடையே நிகழ்ந்து கொண்டிருப்பது என்னவென்பதை ஆராய்வதிலோ தெளிவுபடுத்திக் கொள்வதிலோ பெரிதாய் ஆர்வமில்லை என்னிடம். என்ன இப்போது? உலகின் கேள்விகளுக்கு பதிலிறுத்தல் அத்தனை அவசியமான ஒன்றா? அவரவர் பார்வை மற்றும் கற்று வைத்திருக்கும் ஒழுக்க விதிகளுக்கேற்ப பரிசுத்தமான அன்பு, தெய்வீகக் காதல், அப்பட்டமான காமம், கண்ணியமான நட்பு, சகோதர பாசம், வெற்று இனக்கவர்ச்சி.. இன்னும் என்னென்ன கர்மங்களாகவோ வார்த்தைகளால் நம்மை வகைப்படுத்திக் கொள்ளட்டும். நமக்கென்ன நஷ்டமாகிவிடப் போகிறது? இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு நமக்கென்று புதிதாய் ஒரு வார்த்தை கண்டுபிடிக்கப்படும்போது அதில் நம்மை வகைப்படுத்திக் கொள்ளலாம். அதுவரையில் இவர்கள் இப்படியே கத்திக் கொண்டிருக்கட்டும் விடு.

இப்போதெல்லாம் உன் மீதான பிரியங்கள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அன்பினை சுமக்கவியலாமல் தள்ளாடுகையில் 'பிரிந்து விடலாமா' என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது. அளவிற்கு மிஞ்சினால் அன்பும் கூட நஞ்சுதானோ? என்ன? புன்னகைக்கிறாயா? தெரியும் எனக்கு. பிரிவென்றாலும் கூட உன்னால் புன்னகைக்க முடியும் என்று. தெரியுமா? இந்த சில நாட்களாய் உன்னிடம் பேசப்பிடிப்பதில்லை எனக்கு. உனக்கென்ன.. பேசி விட்டு போய்விடுகிறாய். நீ பேசிப்போன பின்பாய் நீ விட்டுச் சென்ற வார்த்தைகள் என் மிச்சங்களைக் கூட விட்டு வைப்பதில்லை. கூடு கலைந்த கோபத்தில் படையெடுத்துவரும் தேனீக்களைப் போல அவை என்னை துரத்தியபடியே இருக்கின்றன.. காதுகளில் ஓயாத ரீங்காரம். தாங்க முடியவில்லை என்னால்.


மயக்கத்திலாழ்த்துவதும் உலுக்கியெழுப்புவதுமாய் இருவேறு நிலைகளில் செயல்பட்டபடி உன் வார்த்தைகள் என்னைக் கலைத்துப் போடுகின்றன தினமும். போதுமெனப் படுகிறது. உலகம் முழுவதையும் நேசிப்பதற்கான மாபெரும் அன்பு சுமந்து வீடு துறந்த சித்தார்த்தனைப் போன்றே மனம் கொள்ளாப் பிரியங்களுடன் இப்போதே உன்னை பிரிந்துவிடத் தோன்றுகிறது.

என்னிடம் மிகைப்படுத்தல்கள் அதிகமென எப்போதும் குற்றம் சாட்டுவாய் என்னை. உண்மைதான். சில பூக்கள் மென்மையான தென்றலில் கூட உதிர்ந்து விடுவதுண்டு. இந்த கணம் உன்னைப் பிரிவதற்கென்று என்னிடம் காரணங்கள் ஏதுமில்லை.. பிரிந்து விடலாம் என்ற எண்ணம் தவிர. நீயும் இதைத் தான் சொல்வாயென நினைக்கிறேன். 'அய்யோ, பிரிவதா உன்னையா?' என்பது போன்ற ஆபாசக் கூச்சல்களோ, 'நீயில்லன்னா செத்துருவேன்' என்பதான அபத்தமான வசனங்களோ நம்மிடம் இல்லாதிருப்பதே பெரிய ஆறுதல்தான் இல்லையா? நிரூபித்தல்களுக்கான அவசியங்களின்றி மனதின் எல்லா ஊற்றுக்கண்களிலும் சுரந்தபடியிருக்கின்றன உன் மீதான பிரியங்கள்!! வா அருகே.. கன்னங்களில் முத்தமிட்டு, மென்மையாய் கைகுலுக்கி, புன்னகையோடு பிரிந்து போவோம். முடிந்தால் சந்திப்போம்..... எங்காவது, எப்போதாவது இந்த மழையைச் சந்திப்பது போலவே!


credits: http://gayatri8782.blogspot.com/

Comments

Popular posts from this blog

lock up stories repeat offender with a silver touch This is the story of a petty offender’s 42-year-long romance with prisons. ‘Silver’ Srinivasan first saw the inside of a jail in 1966. He was arrested for stealing a silver tumbler from a marriage party in Tiruchi. Since then, he has been involved in more than 100 cases and jailed almost as many times. Now aged 72, he has spent more time in jail than outside it, say advocates and jail authorities who know him well. But ‘Silver,’ as he is affectionately known among fellow prisoners and authorities, has his principles. Rule number one is that he only steals silver articles. “If I come across about 100 sovereigns of gold, I either leave the entire lot untouched or take just one or two sovereigns. If I take away the entire booty, the family would be completely ruined. But not many would go to the police for the loss of one or two sovereigns, especially if the rest of the jewellery is intact.” What if it is silver? “Then...
INDIA BEATS India Beats features stories of the unusual, the exotic and the extraordinary every week in The Hindu. This story was inspiring. Eco vision - A man and his passion M. Yoganathan, a bus conductor, is on a mission to convince students of the importance of conservation. Many schools in Coimbatore are familiar with the figure of this man hitching his precious burden over his shoulder and marching in to talk about Nature. ROUTE number 92 — from Marudumalai to Cheran Mahanagar and back. M.Yoganathan makes the 50-km round trip at least four times a day. He is a bus conductor. Besides the conducting business, he is busy converting young people to his cause, wildlife conservation. Fortunately for him, many educational institutions are located along the route his bus takes — the Agricultural College, Law College, Krishnammal, Hindustan, PSG... Ever ready An old slide projector in a battered black bag accompanies him wherever he goes. "You never know when and where I may ha...
Slow Tears I look up as a tear rolls slowly down my cheek I think about better days and wonder if I'll feel that way again you look at me with those eyes I know so well always serious, so deep and insightful as though you're always in control But not today not now Now you look so scared like for once you don't have the answer I gaze at you looking deep into those hazel eyes Hoping to understand why you've said those thingsyou did I wonder for a moment if this is all a dream if I shall wake in the morning and be relieved you look at me with a confusion I have never seen slowly pull me towards you and wipe the tears from my cheek Credits: Martini - www.netpoets.com